Enter your Email Address to subscribe to our newsletters

திருக்கோவிலூர், 21 ஆகஸ்ட் (ஹி.ச)
கள்ளக்குறிச்சி மாவட்டம்
திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பேருந்து ஒன்று நேற்று மாலை எலவானாசூர் கோட்டையில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி சென்றுள்ளது. அந்த பேருந்தில் வழக்கத்தைவிட அதிகளவில் பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
பேருந்துக்குள் போதிய இடவசதி இல்லாத நிலையில், பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தின் படிக்கட்டுகளிலும், சக்கரத்தின் மேற்பகுதியிலும் ஏறி, தங்களது கால்களை வெளிப்புறமாக தொங்கவிட்டபடி ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர்.
பேருந்து வேகமாக செல்லும்போது, சிறிது தடுமாறினாலும் மாணவர்கள் கீழே விழுந்து பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ள நிலையில் அவர்கள் பயணம் செய்துள்ளனர்.
இந்த காட்சிகளை அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்துள்ளனர்.
மேலும், மாணவர்கள் இவ்வாறு ஆபத்தான முறையில் பயணம் செய்வதைத் தடுக்காமல் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக பள்ளி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால், காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேருந்தில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ