Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
புதுச்சேரி சட்டப்பேரவையில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலை நடத்துவதற்காக சட்டப்பேரவையை கூட்ட உத்தரவிடக் கோரிய வழக்கில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலர் மற்றும் சட்டப்பேரவை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. மேலும், லட்சிய ஜனநாயக கட்சி ஒரு இடத்திலும், திமுக 5 இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் நேயம் மக்கள் கட்சி தலா ஒரு இடத்திலும், தவெக 2 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிமுகவைச் சேர்ந்த அன்பழகன் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அனைத்து எம்எல்ஏக்களும் மே மாதம் பதவியேற்றனர்.
இதற்கிடையே, ஆளும் கூட்டணியில் அமைச்சரவைப் பங்கீட்டில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலை நடத்த சட்டப்பேரவையை கூட்ட உத்தரவிடக் கோரி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், புதிய அரசு பொறுப்பேற்று மூன்று மாதங்கள் ஆகியும் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடத்தப்படவில்லை என்றும், தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலை நடத்தாமல் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலர் மற்றும் சட்டப்பேரவை செயலர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P