Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருவேற்காட்டில் வீடு புகுந்து பெண் தூய்மை பணியாளரை தலையணையால் அமுக்கி கொலை செய்துவிட்டு, அவரது வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான ஆகாஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவேற்காடு அன்னலட்சுமி பகுதியில் வசித்து வந்தவர் ஹேமாவதி (55). இவர் சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு நாட்களாக ஹேமாவதி வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில், அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ஹேமாவதி அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஹேமாவதியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும், அவர் இறந்து சுமார் இரண்டு நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஹேமாவதியின் வீட்டிற்கு கடைசியாக வந்து சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (30) என்பவர் ஹேமாவதி வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஆகாஷை போலீசார் தேடி வந்தனர்.
இதனிடையே, ஆகாஷின் நண்பரான நித்திஷை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்,
ஹேமாவதியின் வீட்டின் அருகே கோவில் இருப்பதாகவும், அங்குள்ள கோவிலில் உடுக்கை அடிப்பதற்காக ஆகாஷ் அடிக்கடி வந்து சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
அப்போது ஹேமாவதியுடன் ஆகாஷுக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், வீட்டில் யாரும் இல்லாததை அறிந்துகொண்ட ஆகாஷ், இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிற்குள் நுழைந்ததாகவும் போலீசாரிடம் நித்திஷ் தெரிவித்துள்ளார்.
வீட்டிற்குள் நுழைந்த ஆகாஷ், ஹேமாவதியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த நகைகளை எடுத்துச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் நித்திஷுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நித்திஷிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள ஆகாஷை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
முக்கிய குற்றவாளியான ஆகாஷ் கைது செய்யப்பட்ட பின்னரே கொலைக்கான முழுமையான காரணம் மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ