Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி 2026-27-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இதுவரை பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை மீதான மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், இன்று நீதி, சிறைகள், சட்டம், எரிசக்தி, சிறப்புத் திட்டங்கள், அறநிலையத் துறை மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்படுகின்றன.
இன்றைய கூட்டத்தொடர் தொடங்கியதும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எண்ணூரில் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
சென்னை எண்ணூர் பகுதியில், கொசஸ்தலை ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் மீன்கள் இறந்து மிதக்கின்றன.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும் பாமக எம்.எல்.ஏ. கணேஷ் குமார் பேசுகையில்,
எண்ணூரில் மீன்கள் இறந்து கிடந்த விவகாரத்தில், சுற்றுச்சூழலைப் பாதிக்கின்ற அனைத்து நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.
இந்த மீன்கள் இறப்பைத் தடுக்காமல் விட்டால் பழவேற்காடு ஏரிக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படும்.
மீனவர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரமும் இதனால் பாதிக்கப்படும் என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN