ரேவந்த் ரெட்டியின் அமெரிக்க பயணம் திடீர் ரத்து -மத்திய அரசு அனுமதி மறுப்பு
ஹைதராபாத் , 21 ஆகஸ்ட் (ஹி.ச.) தெலங்கானா மாநிலத்துக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி லண்டன் மற்றும் அமெரிக்காவில் ‘தெலங்கானா ரைசிங்’ என்ற பெயரில் முதலீட்டாளர்கள் சந்திப்புகளை நடத்த திட்டமிட்டிருந்தார். இத
A


ஹைதராபாத் , 21 ஆகஸ்ட் (ஹி.ச.)

தெலங்கானா மாநிலத்துக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி லண்டன் மற்றும் அமெரிக்காவில் ‘தெலங்கானா ரைசிங்’ என்ற பெயரில் முதலீட்டாளர்கள் சந்திப்புகளை நடத்த திட்டமிட்டிருந்தார்.

இதற்காக அமெரிக்காவின் பாஸ்டன் மற்றும் நியூயார்க் நகரங்களில் பல்வேறு சந்திப்புகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், அமெரிக்காவில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை அனுமதி வழங்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதே நேரத்தில், இங்கிலாந்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால், கடைசி நேரத்தில் ரேவந்த் ரெட்டியின் அமெரிக்க பயணம் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு ரேவந்த் ரெட்டி வருகிற 23-ந்தேதி லண்டனில் இருந்து நேரடியாக ஹைதராபாத் திரும்புகிறார்.

அமெரிக்க பயணத்தை ரத்து செய்ததற்கான காரணம் குறித்து மத்திய அரசு தரப்பில் இதுவரை அதிகாரபூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையே, ரத்து செய்யப்பட்ட அமெரிக்க பயணத்தை அடுத்த மாதம் மீண்டும் மேற்கொள்ள ரேவந்த் ரெட்டி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த முறை அவர் நேரடியாக அமெரிக்கா செல்வதற்கு பதிலாக, தெலங்கானா அரசு அதிகாரிகள் குழுவை அங்கு அனுப்பி முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அமெரிக்க பயணத்துக்கு அனுமதி கிடைக்காதது குறித்து ரேவந்த் ரெட்டி கூறுகையில், அரசியலுக்கு அப்பாற்பட்டு தெலங்கானா இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சியே தனது முக்கிய நோக்கம் என்று தெரிவித்தார்.

மேலும், எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் ‘தெலங்கானா ரைசிங்’ பயணம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் உறுதிபட கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA