தொடர் முகூர்த்தம், வரத்து குறைவு காரணமாக திருப்பூரில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு- மல்லிப்பூ கிலோ ரூ.1,000!
திருப்பூர், 21 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆவணி மாதம் தொடங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்து சுபமுகூர்த்த தினங்கள், வரலட்சுமி நோன்பு மற்றும் கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் உள்ளிட்ட பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்கள் வர உள்ளன. இதனால் பூக்களுக்கான தேவை அதிகரித்து
மல்லிகை


திருப்பூர், 21 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆவணி மாதம் தொடங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்து சுபமுகூர்த்த தினங்கள், வரலட்சுமி நோன்பு மற்றும் கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் உள்ளிட்ட பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்கள் வர உள்ளன. இதனால் பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், வரத்தும் குறைந்துள்ளதால் திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

சத்தியமங்கலம், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் பூக்கள் வரத்து உள்ளது. ஆனால், நேற்று முதல் பூக்களின் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், நேற்று ரூ.480-க்கு விற்பனையான மல்லிப்பூ, இன்று ரூ.520 உயர்ந்து கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ரூ.320-க்கு விற்பனையான முல்லைப்பூ ரூ.480 உயர்ந்து, ரூ.800-க்கு விற்பனையாகி வருகிறது.

இதேபோல், ஜாதிமல்லி ரூ.800, சம்பங்கி ரூ.350, செவ்வந்தி ரூ.320, பெங்களூரு தக்காளி ரோஸ் ரூ.280, பெங்களூரு கலர் ரோஸ் ரூ.360, பன்னீர் ரோஸ் ரூ.200, அரளிப்பூ ரூ.320, கோழிக்கொண்டை பூ ரூ.180 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திடீரென பூக்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam