Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
தூத்துக்குடியில் காவல் மரணம் அடைந்ததாகக் கூறப்படும் அருணாச்சலத்தின் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய அருணாச்சலம், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாகக் கூறி கடந்த ஜூலை 23ஆம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும், காவல்துறையினர் தாக்கியதில் அவர் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும், அருணாச்சலத்தின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், வழக்கு விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. 3 முதுநிலை மருத்துவர்களைக் கொண்டு உடற்கூறாய்வு நடத்தப்பட்டு, அது முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. உடற்கூறாய்வில் அருணாச்சலத்தின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தி வருவதாகவும், அவரது விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், விசாரணை மேற்கொண்ட நீதித்துறை நடுவரின் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam