தென்காசியில் 1500 ஆண்டு பழமை வாய்ந்த நடுகல் கல்வெட்டு கண்டெடுப்பு
தென்காசி, 22 ஆகஸ்ட் (ஹி.ச .) தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே மலையடிப்பட்டி வைப்பாறு ஆற்றுப்படுகையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் கடந்த மூன்று மாதங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் இந்த ஆண்டு அனுமதிக்கப
1,500-year-old hero stone inscription discovered in Tenkasi


தென்காசி, 22 ஆகஸ்ட் (ஹி.ச .)

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே மலையடிப்பட்டி வைப்பாறு ஆற்றுப்படுகையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் கடந்த மூன்று மாதங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட 8 அகழாய்வு தளங்களில் ஒன்றான இந்த தளத்தில் ஏற்கனவே 2,500 ஆண்டுகள் பழமையான சங்க கால சதுர வடிவ செங்கல் படிக்கிணறு கண்டுபிடிக்கப்பட்டு பெரும் கவனத்தை பெற்றது.

தமிழகத்திலேயே முதன்முறையாக கண்டறியப்பட்ட சங்க கால படிக்கிணறு இதுவாகும்.

இந்நிலையில் அதே அகழாய்வு தளத்தில் தற்போது மற்றொரு அரிய கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.

படிக்கட்டுகளுடன் கூடிய பழமையான செங்கல் கிணற்றுக்குள் இருந்து

கி.பி 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் ஆய்வாளர்களின் முதற்கட்ட ஆய்வின்படி,

இந்த நடுகல் கல்வெட்டு தமிழ் எழுத்துக்கள் தமிழி எழுத்தில் இருந்து வட்டெழுத்தாக மாற்றம் பெற்ற காலகட்டத்தைச் சேர்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் எழுத்தியல் வரலாற்றில் மிக முக்கியமான இடைப்பட்ட காலத்திற்கான நேரடி சான்றாக இது கருதப்படுகிறது.

அந்த நடுகல்லில் 'சுருக்கன் சுலகான் நன்னங் கொடியன்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

போரில் வீர மரணம் அடைந்த ஒரு வீரனின் நினைவாக எழுப்பப்பட்ட நடுகல்லாக இது இருக்கலாம் என்றும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் அந்த வீரனுடையதாகவோ அல்லது அவனது பட்டப் பெயராகவோ இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கரிவலம்வந்தநல்லூர் பகுதி சங்க காலம் முதல் தென்காசி பாண்டியர்கள் காலம் வரை தொடர்ச்சியாக மக்கள் வாழ்விடமாக இருந்து வந்ததற்கான சான்றுகள் இந்த அகழாய்வில் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.

இந்த புதிய நடுகல் கண்டுபிடிப்பு, அப்பகுதியின் வீர வரலாறு மற்றும் தமிழ் மொழியின் எழுத்து வளர்ச்சி குறித்த ஆய்வுக்கு பெரும் துணை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b