ஆவினுக்கான பால் கொள்முதல் விலை ரூ.50 ஆக உயர்த்த வேண்டும் - வேல்முருகன் வலியுறுத்தல்
சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆவினுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.50 ஆக உயர்த்துவதுடன், கால்நடை மருத்துவக் கட்டமைப்பை நவீனப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்ம
Velmurugan


Bb


சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆவினுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.50 ஆக உயர்த்துவதுடன், கால்நடை மருத்துவக் கட்டமைப்பை நவீனப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பால் உற்பத்தியாளர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, ஆவினுக்கான பால் கொள்முதல் தொகையை லிட்டருக்கு ரூ.38-லிருந்து ரூ.41 ஆக உயர்த்தியுள்ள தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம்.

அதேவேளையில், தற்போதைய உற்பத்திச் செலவு மற்றும் சந்தை நிலவரத்துடன் ஒப்பிடும்போது இந்த உயர்வு போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.

தனியார் பால் நிறுவனங்கள் அதிக விலை வழங்கும் நிலையில், ஆவினை நம்பி பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு அதைவிட குறைவான தொகை கிடைத்தால், அவர்கள் வேறு சந்தையை நாடுவது இயல்பானது.

எனவே, ஆவினிலும் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.50 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்பது வெறும் கூடுதல் வருமானத்திற்கான கோரிக்கை அல்ல; தமிழ்நாட்டின் எதிர்கால பால் தேவையை உறுதி செய்வதற்கான நடவடிக்கையாகும்.

கால்நடை தீவனம், பராமரிப்பு, மருத்துவம், மருந்துகள் உள்ளிட்ட செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய வருவாய் கிடைத்தால்தான் கால்நடை வளர்ப்பை தொடர்ந்து மேற்கொள்ள முடியும். உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே ஆவினுக்குத் தேவையான பால் வரத்தும் நிலையாக இருக்கும்.

இதனுடன், கிராமப்புற கால்நடை மருத்துவமனைகளை நவீன வசதிகளுடன் தரம் உயர்த்த வேண்டும். போதுமான கால்நடை மருத்துவர்கள், மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் அவசர சிகிச்சை வசதிகள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், தற்போது பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கும் நிவாரணம் எதிர்காலத்தில் நிலையான பால் உற்பத்தியாக மாறும். இதன் மூலம் எதிர்கால பால் தட்டுப்பாட்டையும் தவிர்க்க முடியும். மேலும், கால்நடை வளர்ப்புத் தொழிலில் அடுத்த தலைமுறையினரும் நம்பிக்கையுடன் ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்க முடியும்.

“கால்நடையின் உடல்நலம் என்பது ஒரு குடும்பத்தின் வருமானத்தோடும், ஆவினின் பால் உற்பத்தியோடும் நேரடியாக இணைந்திருக்கிறது. அது மக்களின் வாழ்க்கையோடும் பின்னிப் பிணைந்துள்ளது” என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

ஆவினை வலுவான கூட்டுறவு நிறுவனமாக நிலைநிறுத்த வேண்டுமெனில், அதன் அடித்தளமாக விளங்கும் பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தையும் கால்நடைகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, லிட்டருக்கு ரூ.50 கொள்முதல் விலை நிர்ணயிப்பதுடன், கால்நடை மருத்துவக் கட்டமைப்பை நவீனப்படுத்துதல், தீவனச் செலவைக் குறைப்பதற்கான உதவிகள், கால்நடை காப்பீடு மற்றும் உரிய காலத்தில் ஊக்கத்தொகை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொண்டு, ஆவினின் எதிர்காலத்தை வலுப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ