Enter your Email Address to subscribe to our newsletters

மார்க்காபுரம் , 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திர மாநிலத்தில் மார்க்காபுரம், பிரகாசம், நெல்லூர், கடப்பா மாவட்ட மக்களின் 30 ஆண்டுகால கனவாக திகழும் வேலிகொண்டா நீர்ப்பாசனத் திட்டத்தின் முதல் கட்டம் வருகிற ஆகஸ்டு 31-ந்தேதி தொடங்கப்பட உள்ளது.
அன்றைய தினம் திட்டத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
வேலிகொண்டா திட்டத்தால் இடம்பெயர்ந்தவர்களுக்கு 3-வது கட்ட இழப்பீடாக ரூ.250 கோடிக்கான காசோலையை சந்திரபாபு நாயுடு வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த 48 நாட்களில் வேலிகொண்டா திட்டத்தால் பாதிக்கப்பட்ட 6,206 குடும்பங்களுக்கு 3 கட்டங்களாக ரூ.768 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டத்தில் 2,557 குடும்பங்களுக்கு ரூ.318 கோடியும், 2-வது கட்டத்தில் 1,622 குடும்பங்களுக்கு ரூ.200 கோடியும் வழங்கப்பட்டது. தற்போது 3-வது கட்டமாக 2,027 குடும்பங்களுக்கு ரூ.250 கோடி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.132 கோடி மட்டுமே இழப்பீடாக வழங்க வேண்டியுள்ளது.
1.19 லட்சம் ஏக்கர்
வேலிகொண்டா திட்டத்தின் முதல் கட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால் 1.19 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன நீரும், சுமார் 4 லட்சம் மக்களுக்கு குடிநீரும் கிடைக்கும்.
1996-ம் ஆண்டு நானே இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினேன்.
தற்போது 2026-ம் ஆண்டு நானே திட்டத்தை தொடங்கி வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் முதல் கட்டப் பணிகளை நிறைவு செய்ய ரூ.2,250 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மழைப்பொழிவு குறைவாக இருந்தாலும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஆகஸ்டு 31-ந்தேதி வேலிகொண்டா திட்டத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.
இந்தத் திட்டம் 2021-ம் ஆண்டிலேயே நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால் முந்தைய ஆட்சியின் நிர்வாகத் தாமதங்களால் திட்டம் காலதாமதமானது. பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம்.
கங்கை-கோதாவரி-காவிரி நதிகளை இணைப்பதன் மூலம் நாட்டில் நீர் பாதுகாப்பை ஏற்படுத்த முடியும். மார்க்காபுரம் மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் வழியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். செப்டம்பர் மாதம் தோட்டக்கலை மையத்துக்கு அடிக்கல் நாட்டப்படும்.
ராமாயபட்டினம் துறைமுகம் மூலம் விவசாயிகள் தங்கள் தோட்டக்கலை விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு ஏற்படும்.
இடம்பெயர்ந்தவர்கள் மகிழ்ச்சி
அரசு வழங்கிய இழப்பீட்டால் வேலிகொண்டா திட்டத்தால் இடம்பெயர்ந்த மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தங்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்கப்பட்டதுடன், மறுகுடியமர்வு காலனிகளில் தேவையான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் நீர்வளத்துறை மந்திரி நிம்மல ராமாநாயுடு, எம்.பி. மாகுண்டா சீனிவாசலு ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA