புதுச்சேரி அரசு கொறடாவாக மீண்டும் ஆறுமுகம் நியமனம் - ஆளுநர் ஒப்புதல்
புதுச்சேரி, 22 ஆகஸ்ட் (ஹி.ச.) சட்டசபையில் தனது ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ.,களை கட்டுப்படுத்தி, ஒருங்கிணைக்கும் முக்கியப் பொறுப்பிலுள்ள மக்கள் பிரதிநிதி பணி தான் அரசு கொறாடா. சட்டசபை நடவடிக்கைகளில் கட்சி ஒழுங்கைப் பேணவும், அரசின் செயல்பாடுகள் தொய்
Arumugam reappointed as Puducherry Government Whip


புதுச்சேரி, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

சட்டசபையில் தனது ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ.,களை கட்டுப்படுத்தி, ஒருங்கிணைக்கும் முக்கியப் பொறுப்பிலுள்ள மக்கள் பிரதிநிதி பணி தான் அரசு கொறாடா. சட்டசபை நடவடிக்கைகளில் கட்சி ஒழுங்கைப் பேணவும், அரசின் செயல்பாடுகள் தொய்வின்றி நடக்கவுமே இந்தப் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

முக்கிய மசோதாக்கள், பட்ஜெட் அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற வாக்கெடுப்புகளின் போது, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தவறாமல் அவைக்கு வர வேண்டும் என்றும், கட்சி எடுக்கும் முடிவின் படியே ஓட்டளிக்க வேண்டும் என்றும் எழுத்துப்பூர்வமான உத்தரவை பிறப்பிப்பார்.

இந்த நிலையில் புதுச்சேரி அரசின் கொறடாவாக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ஏ.கே.டி. ஆறுமுகம் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது அரசு கொறடாவாக பதவி வகித்தவர் இந்திரா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம். இந்நிலையில் தற்போது அமையவுள்ள புதிய சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு, மீண்டும் அவரையே அரசு கொறடாவாக நியமிக்க முதலமைச்சர் என்.ரங்கசாமி பரிந்துரை செய்திருந்தார்.

முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று ஆறுமுகத்தை அரசு கொறடாவாக நியமிக்க துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

வரும் 24-ம் தேதி துணைநிலை ஆளுநர் உரையுடன் புதுச்சேரி சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், இந்த நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது. சட்டப்பேரவை நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது, ஆளும் கூட்டணி உறுப்பினர்களை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளை அரசு கொறடா மேற்கொள்வார்.

அரசு கொறடா நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தலைமைச் செயலாளர் சரத் சவுகான் அரசிதழில் வெளியிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b