ஓணம் பண்டிகை எதிரொலி - சென்னையில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு செல்லும் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு
சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.) கேரள மாநிலத்தில் வெகு விமர்சையாக தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்படும், ஓணம் பண்டிகை வரும் 26 ஆம் தேதி, புதன்கிழமை நடக்க இருக்கிறது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஜாதி மதங்கள் கடந்து, அனைத்து தமிழர்களும் ஒட்டுமொத்தமாக எவ்
Chennai International Airport


சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

கேரள மாநிலத்தில் வெகு விமர்சையாக தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்படும், ஓணம் பண்டிகை வரும் 26 ஆம் தேதி, புதன்கிழமை நடக்க இருக்கிறது.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஜாதி மதங்கள் கடந்து, அனைத்து தமிழர்களும் ஒட்டுமொத்தமாக எவ்வாறு கொண்டாடப்படுகிறதோ, அதைப்போல் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை, மலையாளிகள் அனைவரும், ஜாதி மதம் கடந்து, ஒட்டுமொத்தமாக கொண்டாடப்படும் பண்டிகை ஓணம் பண்டிகை.

இந்த ஓணம் பண்டிகையை, கேரள மாநிலத்தவர் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களில், குடும்பத்தினர் உற்றார் உறவினர்களுடன் கூடி மகிழ்ந்து கொண்டாடுவது வழக்கம்.

இதையொட்டி வெளியூர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள், சொந்த ஊர்களுக்கு, ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு, சில தினங்களுக்கு முன்னதாகவே சென்று விடுவது வழக்கம்.

அதைப்போல் வரும் 26 ஆம் தேதி ஓணம் பண்டிகையை, சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு, சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள கேரள மாநிலத்தவர்கள், சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கியுள்ளனர். இதற்காக சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதைப்போல் ரயில் பேருந்துகளில் செல்லும்போது, பல மணி நேரம் பயண நேரம் ஆகும் என்பதால், பலர் விமானங்களில், கேரள மாநிலம் செல்கின்றனர்.

சனி, ஞாயிறு விடுமுறை நாட்களோடு சேர்த்து ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு, இன்று சனிக்கிழமை முதல், சென்னை விமான நிலையத்தில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய இடங்களுக்கு விமான பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

கேரள மாநிலத்தவர் ஒட்டுமொத்தமாக விமானங்களில் சொந்த ஊர் திரும்புவதால், சென்னையில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர் செல்லும் விமானங்களில், பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

இதை அடுத்து வழக்கம் போல் சென்னை விமான நிலையத்தில், பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் வழித்தடங்களில், விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

சென்னை- கொச்சி வழக்கமான கட்டணம் ரூ.5,336

இன்று கட்டணம் ரூ.14,843

சென்னை- திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம் ரூ.5,853

இன்று கட்டணம் ரூ.14,700

சென்னை- கோழிக்கோடு வழக்கமான கட்டணம் ரூ.6,158

இன்று கட்டணம் ரூ.17,678

சென்னை- கண்ணூர் வழக்கமான கட்டணம் ரூ.5,655

இன்று கட்டணம் ரூ.12,270

கொச்சி வழியாக செல்வதற்கு கட்டணம் ரூ.21,694

இவ்வாறு பல மடங்கு விமான டிக்கெட் கட்டணங்கள் அதிகரித்துள்ளதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் கேரள பயணிகள், உற்சாகத்துடன் தங்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

அதோடு இதைப் போன்ற பண்டிகை காலங்களில், கேரள மாநிலத்திற்கு கூடுதல் விமானங்களை, சென்னையில் இருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN