Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை நாளையொட்டி முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
வரலாற்றின் தடங்களைச் சுமந்தும், நவீனத்தின் வேகத்தோடு பயணித்தும் தமிழகத்தின் வெற்றித் தலைநகராகத் திகழும் சென்னையின் பெருமையைப் போற்றும் இந்த நன்னாளில் அனைவருக்கும் இனிய சென்னை நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும் கொண்ட சென்னையானது கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்று வருவதாகவும், உழைப்பும் புதுமையும் சங்கமிக்கும் நகரமாக விளங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பல்வேறு மொழி, இன மற்றும் பண்பாடுகளைச் சேர்ந்த மக்களை அரவணைத்து, அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் மாநகரமாகவும் சென்னை திகழ்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையின் வரலாற்றுப் பெருமையையும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாத்து, நவீன உட்கட்டமைப்புகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு பெருநகரமாக சென்னையை மேலும் உயர்த்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் சம வாய்ப்பு, பாதுகாப்பான சூழல் மற்றும் வளமான வாழ்வு கிடைத்திட உறுதியேற்போம் எனக் கூறியுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய்,
வளரட்டும் சென்னைப் பெருநகரம்!
உயரட்டும் மக்களின் வாழ்க்கைத்தரம் என்று தனது சென்னை நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ