தலைமைச் செயலாளரை பதவி நீக்க கோரி சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்
சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச) இடதுசாரி கட்சிகள் மற்றும் மாணவர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் சுற்றறிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் க
Shanmu


சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச)

இடதுசாரி கட்சிகள் மற்றும் மாணவர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் சுற்றறிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை பனகல் மாளிகை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று, தமிழக அரசுக்கும் தலைமைச் செயலாளருக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம் கூறியதாவது:

இடதுசாரி கட்சிகளின் செயல்பாடுகளை முடக்கும் வகையிலும், இடதுசாரி சிந்தனையுடன் போராடக்கூடிய மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்கக்கூடிய வகையிலும், தலைமைச் செயலாளரின் உத்தரவின் அடிப்படையில் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஜூலை 28-ஆம் தேதி தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற சட்டம்-ஒழுங்கு தொடர்பான கூட்டத்தின் முடிவின் அடிப்படையிலேயே கல்லூரி கல்வி ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியதாகவும், அதனைத் தொடர்ந்து உயர்கல்வித்துறை செயலாளர் அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் அனுப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனநாயக நாட்டில் இதுபோன்ற நடவடிக்கை நடைபெறுவது ஏற்க முடியாதது என்றும், தலைமைச் செயலாளரின் நடவடிக்கை சட்டவிரோதமானது மட்டுமின்றி ஜனநாயகத்துக்கும் அரசியலமைப்புக்கும் எதிரானது என்றும் பெ.சண்முகம் குற்றம்சாட்டினார்.

“ஜனநாயகத்துக்கும் அரசியலமைப்புக்கும் விரோதமாக செயல்படும் தலைமைச் செயலாளர் அந்தப் பதவியில் நீடிக்க தகுதியற்றவர். அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அமைச்சரின் பதில் ஏற்புடையதல்ல

இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் அளித்த பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்றும் பெ.சண்முகம் தெரிவித்தார்.

சில அமைப்புகள் தொடர்பான வார்த்தைகள் தவறுதலாக இடம்பெற்றுவிட்டதாக அமைச்சர் கூறியிருந்தால், அந்தத் தவறுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவையில் உறுதியளித்திருக்க வேண்டும். ஆனால், அதுபோன்ற எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

குஜிலியம்பாறை வட்டாட்சியர் உத்தரவு குறித்து கேள்வி

குஜிலியம்பாறை வட்டாட்சியர், அந்தப் பகுதிக்கு உட்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தொடர்பான விவரங்களை 24 மணி நேரத்திற்குள் சேகரித்து அனுப்புமாறு உத்தரவிட்ட விவகாரத்தையும் பெ.சண்முகம் கடுமையாக விமர்சித்தார்.

24 மணி நேரத்தில் இவ்வளவு விவரங்களை சேகரித்து வட்டாட்சியர் என்ன செய்யப் போகிறார்? என அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரம் சட்டப்பேரவையில் எழுப்பப்பட்டபோது, சம்பந்தப்பட்ட அதிகாரி ஒரு சர்வே எடுப்பதற்காக அனுப்பப்பட்டதாக வருவாய்த்துறை அமைச்சர் தெரிவித்ததாகவும், ஆனால் எந்த சர்வே என்பதற்கான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அதே நேரத்தில், மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரி பயிற்சிக்காக வந்ததாகவும், பயிற்சி முடிந்து சென்னைக்கு திரும்புவதாகவும் தெரிவித்திருப்பதாகக் கூறிய பெ.சண்முகம், அமைச்சர் கூறுவதும் மாவட்ட ஆட்சியர் கூறுவதும் முரண்பாடாக இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

அவர் என்ன பயிற்சி பெற்றார்? கம்யூனிஸ்டுகள் தொடர்பாக கணக்கெடுப்பதற்காகத்தான் பயிற்சி அளிக்கப்பட்டதா? அமைச்சர் கூறுவது உண்மையா அல்லது மாவட்ட ஆட்சியர் கூறுவது உண்மையா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது இடமாற்ற நடவடிக்கை மேற்கொண்டிருப்பது மட்டும் போதாது என்றும், சட்டவிரோதமாக உத்தரவு பிறப்பித்ததற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெ.சண்முகம் தெரிவித்தார்.

இந்த உத்தரவு கீழ்நிலை அதிகாரிகளுக்கு மட்டுமின்றி கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அது சட்டவிரோதமானது என்பது அப்போது ஏன் அதிகாரிகளுக்குத் தெரியவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

“தவறு நடந்துவிட்டது என்றால் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதை மூடி மறைக்க முயற்சிக்கக் கூடாது” என அவர் கூறினார்.

மத்திய அரசுடன் இணைந்து சதி நடக்கிறதா?

பிரதமர் நகர்ப்புற நக்சல்கள் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்படும் எனக் கூறியதாகவும், அதற்கு அடுத்த சில நாட்களில் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்ததாகவும், பின்னர் குஜிலியம்பாறை வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்ததாகவும் பெ.சண்முகம் தெரிவித்தார்.

இந்த நிகழ்வுகளை ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பார்க்கும்போது, மத்திய-மாநில அரசுகள் திட்டமிட்டு இணைந்து செயல்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறினார்.

இந்த சந்தேகத்துக்கு தமிழக அரசும், முதலமைச்சரும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், தவறு நடந்துவிட்டது; உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், பதவிக்காலம் முடிந்த அதிகாரிக்கு ஏன் பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் திறமை வாய்ந்த பல அதிகாரிகள் இருக்கும் நிலையில் அவரையே தலைமைச் செயலாளராக தொடர்ந்து வைத்திருப்பதன் அவசியம் என்ன என்றும் பெ.சண்முகம் கேள்வி எழுப்பினார்.

“ஆட்சிக்கு ஆதரவு அளித்த கட்சி மீதே இப்படியா?”

தமிழகத்தில் தற்போதைய ஆட்சி அமைவதற்கு தங்களது கட்சி ஆதரவு அளித்திருப்பது அனைவருக்கும் தெரிந்த அரசியல் முடிவு எனக் குறிப்பிட்ட பெ.சண்முகம், “ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த கட்சி மீதே தலைமைச் செயலாளர் இப்படித்தான் நடந்து கொள்வாரா?” என கேள்வி எழுப்பினார்.

இத்தகைய சூழலில் தலைமைச் செயலாளர் தொடர்ந்து பதவியில் இருப்பது தமிழகத்தில் நிர்வாகம் சுமூகமாக நடைபெறுவதற்கு உதவாது என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய பாஜக அரசு அழுத்தம் கொடுத்ததன் காரணமாக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பெ.சண்முகம், யார் அழுத்தம் கொடுத்தாலும், இவர்களுக்கு எங்கே போச்சு புத்தி? என காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

Hindusthan Samachar / P YUVARAJ