தமிழகம் முழுவதும் காங்கிரஸ் 'டவுன் ஹால்' விளக்கக் கூட்டங்கள் - இன்று முதல் 7 நகரங்களில் தொடக்கம்
சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எழுப்பிய மக்கள் பிரச்சினைகளை பொதுமக்களிடம் விளக்கும் வகையில், ''டவுன் ஹால்'' என்ற பெயரில் பிரமாண்ட விளக்கக் கூட்டங்கள் இன்று முதல் தொடங்குகின்றன
தமிழகம் முழுவதும் காங்கிரஸ் 'டவுன் ஹால்' விளக்கக் கூட்டங்கள் - இன்று முதல் 7 நகரங்களில் தொடக்கம்


சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எழுப்பிய மக்கள் பிரச்சினைகளை பொதுமக்களிடம் விளக்கும் வகையில், 'டவுன் ஹால்' என்ற பெயரில் பிரமாண்ட விளக்கக் கூட்டங்கள் இன்று முதல் தொடங்குகின்றன.

ஆகஸ்ட் 22-ஆம் தேதியான இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை, தமிழகத்தின் ஏழு முக்கிய நகரங்களில் இந்தக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், சேலம் மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் இந்த டவுன் ஹால் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கிறிஸ்டோபர் திலக், ராபர்ட் புரூஸ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

மேலும், இது வெறும் காங்கிரஸ் கட்சியின் நிகழ்வாக மட்டுமின்றி, இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைந்த நிகழ்வாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் எம்.பி.க்களும் பங்கேற்கின்றனர்.

மதிமுக சார்பில் துரை வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு. வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கே. சுப்பராயன், சச்சிதானந்தம் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. நவாஸ் கனி உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வாக்காளர் பட்டியல் திருத்தம், விலைவாசி உயர்வு, வேலையின்மை, மாநில உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வலுவாக எழுப்பினர்.

அவற்றை மக்கள் மத்தியில் நேரடியாக கொண்டு சேர்க்கும் நோக்கிலேயே இந்த விளக்கக் கூட்டங்கள் நடத்தப்படுவதாக தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Hindusthan Samachar / vidya.b