Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை திருவொற்றியூர் பகுதியில் கழிவுநீர் தொட்டி கட்டும் பணி நடைபெற்று வந்தது.
இதற்காக சுமார் பல அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இந்த பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தத் தொழிலாளியான பூமிநாதன் வயது 37 என்பவர் பள்ளத்திற்குள் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பள்ளத்தின் ஓரத்தில் இருந்த மணல் பெருமளவில் சரிந்து அவர் மீது விழுந்துள்ளது.
மணலுக்குள் சிக்கிய பூமிநாதனை உடன் இருந்த சக தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு மீட்க முயன்றனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் நீண்ட நேரம் போராடி அவரை மீட்டனர். ஆனால் மணலில் புதையுண்டு மூச்சுத் திணறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
உயிரிழந்த தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒப்பந்த நிறுவனம் பணியிடத்தில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதா என்பது குறித்தும், இந்த விபத்தில் ஏதேனும் அலட்சியம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b