Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
திமுகவின் 16-ஆவது அமைப்புத் தேர்தலை முன்னிட்டு, கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பில் பல்வேறு முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட கட்சி மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், கிளைக் கழகம் முதல் மாவட்டக் கழகம் வரையிலான நிர்வாக அமைப்புகளை மறுசீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது உள்ள 77 மாவட்டக் கழகங்களை 110 மாவட்டக் கழகங்களாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வருவாய் மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற அடிப்படையில் மாவட்டங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன.
ஒரு வருவாய் மாவட்டத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதி மட்டுமே எஞ்சினால், அந்தத் தொகுதி அதே வருவாய் மாவட்டத்தில் உள்ள பொருத்தமான கழக மாவட்டத்துடன் 3-வது தொகுதியாக இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்படும் 110 மாவட்டக் கழகங்களில் இடம்பெறும் சட்டமன்றத் தொகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என தலைமைச் செயற்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
கிளைச் செயலாளருக்கு 45 வயது வரம்பு
திமுகவின் அடிப்படை கட்டமைப்பாக உள்ள கிளைக் கழகங்களை வலுப்படுத்தும் வகையில், கிளைக் கழகச் செயலாளராக தேர்வு செய்யப்படுபவரின் அதிகபட்ச வயது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே கிளைச் செயலாளர் பதவியை வகிக்க முடியும்.
மாநகரங்களில் புதிதாக கிளைக் கழக அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகரங்களில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்படும். பிற மாநகராட்சிகளிலும் நிர்வாக சூழலுக்கு ஏற்ப இதுபோன்ற அமைப்புகளை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வட்டச் செயலாளருக்கு 50 வயது
சென்னை மாநகராட்சியில் உருவாக்கப்படும் வட்டக் கழகங்கள் சராசரியாக 10 ஆயிரம் வாக்குகளையும், பிற மாநகரங்களில் சராசரியாக 5 ஆயிரம் வாக்குகளையும் கொண்டதாக அமைக்கப்படும்.
மாநகர, நகர, பேரூர்க் கழகங்களுக்கு உட்பட்ட வட்டக் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவியையும் ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே வகிக்க முடியும்.
நகர, பேரூர், பகுதி செயலாளர்களுக்கும் வயது வரம்பு
பேரூர்க் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவர்களும் 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும்.
சென்னை மாநகராட்சியில் பகுதிக் கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களையும், பிற மாநகரங்களில் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களையும் கொண்டதாக அமைக்கப்படும். பகுதிக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 ஆகவும், பதவிக்காலம் அதிகபட்சம் 2 முறையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நகரக் கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்படும். நகரச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என்றும், ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே நகரச் செயலாளராக இருக்க முடியும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒன்றியக் கழகங்களும் மறுசீரமைப்பு
சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் என்ற அடிப்படையில் ஒன்றியக் கழகங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன.
ஒன்றியச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.
ஊராட்சி ஒன்றியத்தை அடிப்படை அலகாகக் கொண்டு கழக ஒன்றியங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், ஒரு ஊராட்சியை இரண்டாகப் பிரித்து வெவ்வேறு கழக ஒன்றியங்களுடன் இணைக்கக் கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு கழக ஒன்றியமும் ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் இடம்பெறும் வகையில் அமைக்க வேண்டும் என்றும், ஒரு கழக ஒன்றியம் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்குள் இடம்பெறும் நிலை தொடரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 நாட்களுக்குள் புதிய நிர்வாக அமைப்பு
புதிதாக உருவாக்கப்படும் 110 மாவட்டக் கழகங்களை திமுக தலைவர் அறிவித்த பிறகு, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டச் செயற்குழுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
தலைமைக் கழகத்தின் மறுசீரமைப்புக் குழு வழங்கும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளைக் கழக நிர்வாகங்களை 15 நாட்களுக்குள் உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்பின்னர் தலைமைக் கழக பிரதிநிதியின் முன்னிலையில் மீண்டும் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தை நடத்தி ஒப்புதல் பெற்று, இறுதிப் பட்டியலை தலைமைக் கழகத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திமுக தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை 15 முறை அமைப்பு ரீதியான தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது 16-ஆவது அமைப்புத் தேர்தலுக்கான நிர்வாக மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / P YUVARAJ