டாஸ்மாக் முறைகேடு வழக்கு - முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆஜர்
சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.) டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகி உள்ளார். தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்த
Senthil Balaji Press Meet


சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகி உள்ளார்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே தமிழகம் முழுவதும் 41 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்கள், முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் மற்றும் மூத்த மண்டல அதிகாரிகள் உள்ளிட்டோருடன் தொடர்புடைய இடங்களிலும் இந்த சோதனைகள் நடைபெற்றன.

இந்த சோதனைகளின்போது வழக்கு விசாரணைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் ஏற்கெனவே தீவிரமாக ஆய்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக ஏற்கெனவே 2 அல்லது 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ரதேஷ் என்பவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.

அவரைப் பிடிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகப்லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் லுக்கவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவரைக் கண்டு பிடித்து கைது செய்யும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தை அணுகி முன் ஜாமீன் பெற்றிருந்தார்.

அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொள்ளும் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும், விசாரணைக்காக சம்மன் அனுப்பப்படும் ஒவ்வொரு முறையும் தவறாமல் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்திருந்தது.

அந்த நிபந்தனைகளின் அடிப்படையிலேயே, லஞ்ச ஒழிப்புத் துறை அனுப்பிய சம்மனை ஏற்று செந்தில் பாலாஜி இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டம் இல்லாத நாளாக இருப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராகும் வகையில் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இன்று காலை அவர் ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.

டாஸ்மாக் மதுபானங்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து ஒப்பந்தங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.10 வீதம் கூடுதலாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் தொகை தொடர்பான முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும் இடம்பெற்றுள்ளது

இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் சோதனைகளின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

41 இடங்களில் நடைபெற்ற சோதனைகளின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்துள்ளனர்.

அந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ள தகவல்கள், டாஸ்மாக் போக்குவரத்து ஒப்பந்தங்கள், மதுபாட்டில்களுக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் தொகை மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் 100-க்கும் மேற்பட்ட கேள்விகளைத் கேட்டு விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜியிடம் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கும், அவர் அளிக்கும் பதில்களுக்கும் ஏற்ப அடுத்தகட்ட விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / ANANDHAN