Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக அரசின் இலவச தங்க மோதிரத் திட்டத்தை விமர்சித்துள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்களின் தரவுகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தாரைவார்க்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசின் இலவச திட்டத்திற்குள் மற்றொரு இலவச திட்டமா அல்லது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையா என்ற கேள்வி எழுகிறது. ‘செய்கூலி இல்லை; ஒரு பைசா செலவில் தங்க மோதிரம்’ என்ற திட்டத்தை ஒரு நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வழங்கப்பட உள்ள 1,28,499 மோதிரங்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் மட்டும்தானா, அல்லது ஐந்து ஆண்டுகளுக்கான ஒப்பந்தமா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்தவில்லை என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
ஆதாயம் இல்லாமல் எந்த கார்ப்பரேட் நிறுவனமும் இந்தத் திட்டத்தில் இறங்காது என்றும், அரசு இயந்திரத்துக்குள் தனது செல்வாக்கை விரிவுபடுத்தவும், அரசின் வாயிலாக லட்சக்கணக்கான மக்களிடம் தங்கள் நிறுவனத்தை எளிதாக விளம்பரப்படுத்தவும் இது ஒரு கார்ப்பரேட் உத்தியாக இருக்கலாம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், சிறு மீனைப் போட்டு பெரிய மீனை பிடிப்பதைப் போன்ற இந்த உத்தி மூலம் தமிழக மக்களின் விலைமதிப்பற்ற தரவுகள் சேகரிக்கப்படுவதற்கும், அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை கார்ப்பரேட் நிறுவனங்களின் வேட்டைக் காடாக மாற்றும் வகையில் அரசு செயல்படக்கூடாது என்றும், மக்களின் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
ஒரு பைசா ‘மோசடி’ மோதிரத் திட்ட ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ