ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக குறைவு
தர்மபுரி, 22 ஆகஸ்ட் (ஹி.ச.) தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக நீடித்து வந்த நீர்வரத்து, இன்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கன அட
ஒகேனக்கல்


தர்மபுரி, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.

கடந்த 4 நாட்களாக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக நீடித்து வந்த நீர்வரத்து, இன்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்ததன் காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் ஒகேனக்கல் அருவி மற்றும் காவிரி ஆற்றின் பல்வேறு பகுதிகளில் நீரின் வேகம் குறைந்து காணப்படுகிறது.

இதனிடையே, நீர்வரத்து தொடர்ந்து 10 ஆயிரம் கன அடியாக இருப்பதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள தடை 7-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

பரிசல் சவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் இறங்கவோ, ஆபத்தான பகுதிகளுக்குச் செல்லவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நீர்வரத்து மேலும் குறைந்து, ஆற்றின் நீரோட்டம் பாதுகாப்பான நிலைக்கு வந்த பின்னரே பரிசல் இயக்குவதற்கான அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam