Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹானூர் வட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் 3 தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதியரசர் வி.ராமசுப்பிரமணியன் ஆகியோருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி அதிகாலை சாக்யா வன அலுவலகத்தைச் சேர்ந்த வனக்காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் டோமராபாளையம் மற்றும் மரியமங்கலம் பகுதிகளைச் சேர்ந்த அந்தோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), குமார் (36) ஆகிய 3 பேர் உயிரிழந்ததாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
மூவரும் மான் வேட்டைக்காக காட்டுக்குள் சென்றதாகவும், வனத்துறையினர் தடுக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கர்நாடக வனத்துறை கூறியுள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டை அன்புமணி திட்டவட்டமாக மறுத்துள்ளார். காணாமல் போன கால்நடைகளைத் தேடுவதற்காகவே அவர்கள் காட்டுக்குள் சென்றதாகவும், அவர்களுடன் சென்ற நான்காவது நபர் தப்பி வந்து தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாமக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு சம்பவ இடத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், பொதுமக்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள், அரசியல் கட்சியினரை சந்தித்து விசாரணை நடத்தியதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் அரசு மருத்துவமனைகள் இருந்தபோதிலும், உடல்கள் சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ள மைசூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக அரசு ஏற்கனவே மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், விசாரணை முடிவதற்கு முன்பே வனத்துறை அமைச்சர் வனத்துறையினருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது விசாரணையின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புவதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
எனவே, 3 தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ மூலம் சுயாதீனமான விசாரணை நடத்த வேண்டும், அனைத்து தடயவியல் மற்றும் பாலிஸ்டிக் ஆதாரங்களையும் பாதுகாத்து ஆய்வு செய்ய வேண்டும், சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பிரதமர் உள்ளிட்டோரிடம் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam