மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் பலவீனமாக செயல்படுகிறார் - அப்பாவு
நெல்லை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை கோவளத்தில் நடைபெற்ற தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில், நிலுவையில் உள்ள நதிநீர் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது தமிழக முதல்வரின் பலவீனத்தை பிரதிபலிப்பதாக
அப்பாவு


நெல்லை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை கோவளத்தில் நடைபெற்ற தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில், நிலுவையில் உள்ள நதிநீர் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது தமிழக முதல்வரின் பலவீனத்தை பிரதிபலிப்பதாக தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

மாநாட்டில் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், நீர் பங்கீடு என்பது நீர் ஒத்துழைப்பாக மாற வேண்டும் என்றும், மேகதாது அணை தமிழகத்திற்காக கட்டப்பட வேண்டும் என்றும் பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூருவின் குடிநீர் தேவைக்கு 5 டி.எம்.சி. தண்ணீர் போக மீதமுள்ள தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிடுவோம் என அமித்ஷா முன்னிலையில் உறுதியளித்ததாக சிவகுமார் கூறியிருப்பது வஞ்சகமான வார்த்தைகள் என்றும் அப்பாவு விமர்சித்துள்ளார்.

மேலும், உச்சநீதிமன்ற உத்தரவு இருந்தும் கர்நாடகா தண்ணீர் திறக்காத நிலையில், தமிழக முதல்வர் மேகதாது அணை கட்டப்படுவதை தடுத்து நிறுத்துவோம் என திட்டவட்டமாக கூறாமல், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்ற தொனியில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தையும் சுட்டிக்காட்டிய அப்பாவு, அணையின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் தொடர்பான விவகாரங்களில் தமிழகத்தின் நிலைப்பாடு பலவீனமடைந்ததன் தொடர்ச்சியாகவே புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரள முதல்வரின் கருத்தையும் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு தமிழக முதல்வர் துணை போக முயற்சிப்பதாகவும், தமிழக மக்களுக்கு துரோகம் செய்ய நினைக்கும் எந்த நடவடிக்கையையும் தமிழகம் ஏற்காது என்றும் அப்பாவு தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும், மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சியை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P