Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
மாமல்லன் அணைக்கு கரை அமைக்கும் பணிக்காக செங்கல்பட்டு மாவட்டம் ஆலத்தூர் ஏரியில் இருந்து மண் எடுப்பதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆலத்தூர் ஏரி நீரினை பயன்படுத்துவோர் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், மாமல்லன் அணைக்கு கரை அமைக்கும் பணிக்காக ஆலத்தூர் ஏரியில் இருந்து மண் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஏரியில் இருந்து அதிகளவில் மண் எடுப்பதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், ஆலத்தூர் ஏரியை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடும் என்பதால், ஏரியில் இருந்து மண் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ