Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
தேனி மாவட்டம் மேகமலை புலிகள் சரணாலயத்தை ஒட்டியுள்ள 14 ஊராட்சிகளில் பல தலைமுறைகளாக வசித்து வரும் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை வனப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பாதிக்கக்கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
பட்டா வைத்துள்ள விவசாயிகளுக்குக் கூட தங்கள் நிலங்களில் விவசாயம் செய்வதில் தடைகள் ஏற்படுவதாகவும், தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் விவசாய விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லும்போது சோதனைச் சாவடிகளில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளாக இந்தப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள், விவசாயிகள், வனத்தைச் சார்ந்து வாழும் மக்கள், பட்டா வைத்திருப்பவர்கள் மற்றும் வணிக ரீதியான ஆக்கிரமிப்பாளர்கள் என அனைவரையும் ஒரே பிரிவாகக் கருதி நடவடிக்கை எடுப்பது நியாயமான அணுகுமுறை அல்ல.
கடந்த 2026 மே மாதம், மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் தேவையான இடங்களில் பொதுமக்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து நடைபெற வேண்டும் எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே, மக்களின் வாழ்வாதாரத்தை ஒரே நாளில் பறிக்கும் நடவடிக்கைகளுக்கு பதிலாக, மாற்றுக் குடியிருப்பு, மாற்று வாழ்வாதாரம் மற்றும் உரிய கால அவகாசத்துடன் மனிதாபிமான அடிப்படையில் இதனை தமிழக அரசு அணுக வேண்டும்.
தமிழக அரசு, வனத்துறை, வருவாய்த்துறை, நிலஅளவைத் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவை அமைத்து, செயற்கைக்கோள்/DGPS அடிப்படையில் ஒவ்வொரு நிலத்தையும் மறுஆய்வு செய்து, உண்மையான வனநிலம், சட்டப்பூர்வமான பட்டா நிலம், நீண்டகால குடியிருப்பு, உண்மையான ஆக்கிரமிப்பு மற்றும் விவசாயப் பகுதி ஆகியவற்றைத் தெளிவாக வரையறுக்க வேண்டும்.
மேகமலை விவகாரத்தில் வனங்களையும், புலிகள் காப்பகத்தையும் பாதுகாப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மனிதாபிமானத்துடன் பாதுகாப்பது அரசின் கடமை. சட்டத்தின் அடிப்படையிலும், மனிதாபிமானத்தின் அடிப்படையிலும் மேகமலை மக்களுக்கு நிரந்தரத் தீர்வை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.
வனத்தையும் காப்போம், வனவிலங்குகளையும் காப்போம். அதே நேரத்தில், பல தலைமுறைகளாக அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்போம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam