இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் த.வெ.க.வுடன் தான் கூட்டணி - அமைச்சர் ஷாஜகான்
நெல்லை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.) நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஷாஜகான், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, சிறுபான்மையினர் நலத்துறை 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிறிஸ்தவ,
Minister Shajahan


நெல்லை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஷாஜகான், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

சிறுபான்மையினர் நலத்துறை 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிறிஸ்தவ, முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டுக்காக அரசு அறிவிக்கும் நலத்திட்ட உதவிகள் உரிய முறையில் அவர்களை சென்றடைகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில் நெல்லை மாவட்டத்தில் சுமார் 150 பயனாளிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

சிறு தொழில் தொடங்குவதற்கான உதவிகள், கல்வி உதவித்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் இதில் அடங்கும்.

மேலும் கிறிஸ்தவ பணியாளர்கள் நலவாரியம், உலமாக்கள் நலவாரியம், சிறுபான்மையினர் ஆணையம், ஹஜ் குழு உள்ளிட்ட அமைப்புகள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் எவ்வாறு செயல்பட்டு வருகின்றன என்பது குறித்தும் ஆய்வுக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

தொடர்ந்து 4 மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு சமுதாயப் பிரமுகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் தற்போது துறை வாரியான மானியக் கோரிக்கைகள் நடைபெற்று வருகின்றன. சிறுபான்மையினர் நலத்துறையின் மானியக் கோரிக்கை வருகிற 27-ம் தேதி நடைபெறுகிறது.

சிறுபான்மை கிறிஸ்தவ, முஸ்லிம் சமுதாய மக்கள் நீண்ட காலமாக முன்வைத்து வரும் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் அன்றைய தினம் வெளியாகும். சிறுபான்மை மக்கள் மகிழும் வகையில் அந்த அறிவிப்புகள் அமையும்.

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையிலும் நெல்லை மாவட்டத்துக்காக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. நீண்ட கால கோரிக்கையான வணிகர்குளம், வணிகர்புரம், வெள்ளங்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லறைத் தோட்டங்களுக்கு சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த ரூ.1.36 கோடி நிதி விரைவில் விடுவிக்கப்பட உள்ளது.

அதேபோல் சுத்தமல்லி, நரசிங்கநல்லூர் கிராமங்களில் வசிக்கும் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மையவாடி, கபரஸ்தான் அமைப்பது குறித்த கோரிக்கையும் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இது தொடர்பாக முதலமைச்சருடன் கலந்துரையாடி, சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள முயற்சி செய்வோம் என்றார்.

நீண்ட காலமாக சிறையில் உள்ள சிறைவாசிகள் விவகாரம் குறித்தும் அமைச்சர் பேசினார்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

அவர்களின் நன்னடத்தைக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் மாநாட்டில் அறிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் பலருக்கு ஏற்கனவே பரோல் மூலம் விடுதலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த 2 மாத தற்காலிக விடுப்பும் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தடைபட்டிருந்தது.

அந்த தற்காலிக விடுப்பையாவது மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

உயர் அதிகாரிகள் இது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர். விரைவில் தற்காலிக விடுப்பு அடிப்படையில் அவர்கள் வெளியே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

நிரந்தர விடுதலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் அரசின் பரிசீலனையில் உள்ளது. சட்டத்திற்கு உட்பட்டு நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்.

முதலமைச்சர் பதவியேற்ற பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் தலைமையிலான குழு முதலமைச்சரை சந்தித்து 12 கோரிக்கைகளை வழங்கியது.

அதில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்களுக்கு நிரந்தர விடுதலை வழங்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக இடம்பெற்றது. அரசு இதுகுறித்து பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுக்குழு ஏற்கனவே எடுத்த தீர்மானத்தின்படி, தற்போதைய கூட்டணி தொடரும். உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் மற்றும் 2029 நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று கட்சி தலைமை தெளிவாக அறிவித்துள்ளது.

இந்தியா கூட்டணி 2029-ம் ஆண்டை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது. தமிழக வெற்றி கழகமும் அந்த கூட்டணியில் இணைந்து பயணிக்கும். திமுக தொடருமா என்பது குறித்து திமுக தலைமைதான் விளக்கம் அளிக்க வேண்டும்.

கேரளாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. 5 அமைச்சர்கள், 22 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், இந்தியா கூட்டணியில் தங்கள் பங்களிப்பு தொடரும் என்றார்.

முஸ்லிம் சமுதாய மக்கள் தற்போதைய அரசின் செயல்பாடுகளை மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகின்றனர். பல ஆண்டுகளாக பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு தற்போது அதிகாரத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதை சமுதாய மக்கள் பெருமையாக கருதுகின்றனர்.

கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் தொடங்குதல் உள்ளிட்ட துறைகளில் முஸ்லிம் சமுதாய மக்களை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், சமுதாய மக்களின் மகிழ்ச்சி மேலும் அதிகரிக்கும். தற்போதைய அரசு இந்த விஷயத்தில் அடுத்த கட்டத்திற்கு சென்று செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

வக்பு திருத்தச் சட்டத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை நிர்வாக அமைப்பில் இடம்பெறச் செய்யும் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

முந்தைய ஆட்சியைப் போலவே தற்போதைய தமிழக வெற்றி கழக தலைமையிலான அரசும் வக்பு திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. நீதிமன்ற வழக்குகளின் முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஹஜ் பயணத்துக்கு வழங்கப்படும் மானியம் போன்று உம்ரா பயணத்துக்கும் மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது.

ஹஜ் என்பது இஸ்லாமியர்களின் ஐந்து அடிப்படை கடமைகளில் ஒன்று. அதன் வரலாற்றுப் பின்னணியில் அரசு உதவி வழங்கப்பட்டு வருகிறது.

உம்ரா மானியம் தொடர்பான கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

மதம் மாறியவர்களுக்கு எந்த அந்தஸ்து வழங்குவது என்பது நீண்டகால சர்ச்சையாக உள்ளது. மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக சமீபத்தில் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

சமுதாயங்கள் பயன்பெறும் வகையில் இடஒதுக்கீட்டை தொடர்ந்து பெறுவதற்கான நிர்வாக மற்றும் சட்டரீதியான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான அரசு தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறது. தற்போது தமிழக வெற்றி கழகம் போன்ற புதிய சக்திகள் இந்தியா கூட்டணியில் இணைந்து வருகின்றன.

தமிழகத்தில் மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் விஜய்க்கு செல்வாக்கு உள்ளது. அவரது தாக்கம் இந்திய அளவிலும் வெளிப்பட்டு வருகிறது. அரசியல் விமர்சனங்கள் வருவது இயல்பானது.

அதைத் தாண்டி மதச்சார்பற்ற நல்லிணக்கம் மற்றும் சமூகநீதியை பாதுகாக்கும் நல்லாட்சி 2029-ல் உருவாகும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழக வெற்றி கழகம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து பயணிக்கும் என்றார்.

2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கூட்டணி கட்சிகள் அமர்ந்து முடிவு செய்யும். இப்போதே யார் பிரதமராக வேண்டும் என்று கூறுவது சரியாக இருக்காது என்றும் தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக முதலமைச்சர் சந்தித்ததை வைத்து பா.ஜ.க.வுடன் நெருக்கம் ஏற்பட்டுவிட்டதாக கூறப்படும் விமர்சனங்களில் துளியும் உண்மை இல்லை.

மத்திய, மாநில அரசுகள் அரசு நிர்வாக ரீதியாக இணைந்து செயல்பட வேண்டிய சூழ்நிலைகளில் இதுபோன்ற சந்திப்புகள் நடைபெறுவது இயல்பானது. தென்னிந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் அந்த சந்திப்பில் பங்கேற்றனர். அதனால் அவர்களை பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளனர் என்று கூற முடியாது.

சட்டப்பேரவையில் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக 25 ஆண்டுகள் என்ற அடிப்படையில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்றைய சட்டப்பேரவை விவாதத்திலும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதோ அர்ஜுன், 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களுக்கு விடுதலை வழங்க வேண்டும் என்ற அரசின் நிலைப்பாட்டை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை வழங்குவோம் என்று முதலமைச்சர் உறுதியாக அறிவித்துள்ளார். அதன் மூலம் அரசுக்கு சேமிக்கப்படும் பல ஆயிரம் கோடி ரூபாய் வரும் ஆண்டுகளில் மக்களின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.

இதனால் மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, தமிழக மக்களின் வாழ்க்கையில் இந்த ஆட்சி ஒரு பொற்காலமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN