Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கல்லூரி மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவ ஊழியர் மீது பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோட்டார் பகுதியைச் சேர்ந்த 23 வயது மாணவர், நாகர்கோவில் அருகே உள்ள கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வருகிறார். குடும்ப வறுமை காரணமாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் நிறுவனம் மூலம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பகுதி நேர பணியாளராக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு பணியாற்றிய சீனியர் மருத்துவ ஊழியர் ஒருவர், முதலில் நண்பராக பழகியதாகவும், பின்னர் தன்னிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கத் தொடங்கியதாகவும் மாணவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஓரினச்சேர்க்கைக்கு தொடர்ந்து வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்தபோதும் தன்னை விடாமல் தொல்லை கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
ஓடும் பேருந்திலும் தொல்லை
பணி நிமித்தமாக சென்னை செல்ல வேண்டியிருந்தபோது, சம்பந்தப்பட்ட ஊழியர் தன்னை பேருந்தில் அழைத்துச் சென்றதாகவும், அப்போது ஓடும் பேருந்திலேயே பாலியல் தொல்லை கொடுத்து ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியதாகவும் மாணவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதன் பின்னரும் தனது வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் மாணவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
புகார் தொடர்பாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்துக்கும் தகவல் சென்ற நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஊழியர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam