Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம், சூலூர் மற்றும் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கோவையில் ஏராளமான தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், வெளியூர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் புறநகர் பகுதிகளில் வாடகை அறைகள் எடுத்து தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை புறநகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகள் மற்றும் தனியார் விடுதிகளில் போலீசார் இன்று திடீர் சோதனை நடத்தினர்.
மாணவர்கள் தங்கும் அறைகளில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா, மாணவர்கள் அல்லாத வெளி நபர்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
சோதனையின் போது ஒரு சில அறைகளில் இருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் (குட்கா) சில அறைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அண்மைக்காலமாக கோவையில் மாணவர்களிடையே அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மலுமிச்சம்பட்டி பகுதியில் அமுதன் என்ற கல்லூரி மாணவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மாணவர்களின் விடுதிகளுக்குள் வெளிமாவட்ட ரவுடிகள் மற்றும் வழிப்பறி கும்பலைச் சேர்ந்தவர்கள் தஞ்சம் அடைந்திருப்பது அண்மைய விசாரணைகளில் தெரியவந்தது.
இதன் காரணமாக ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை ஒடுக்க மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த தீவிர வேட்டை நடத்தப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி மாணவர்களைத் தங்க வைக்கும் விடுதி உரிமையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது
Hindusthan Samachar / vidya.b