Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் “எதிர்நீச்சலில் வென்ற பெரியார்” என்ற தலைப்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு முன்பு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அதனை பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் மாற்றியமைத்தனர். தற்போது NEET, CUET உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பள்ளிகளிலேயே மாணவர்களின் திறமையை மதிப்பீடு செய்யாமல், வெளியில் இருந்து நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகள் மூலம் வாய்ப்புகள் தீர்மானிக்கப்படுகின்றன. மேலும், பல லட்சம் ரூபாய் கட்டணம் வசூலித்து பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் உருவாகியுள்ளதால் ஏழை மற்றும் பின்தங்கிய மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
“NEET தகுதியானவர்களுக்கு ஒரு வாய்ப்பு; தகுதியற்றவர்களுக்கு ஒரு பிரச்சனை” என்ற நிலை ஏற்பட்டுள்ளது. NEET தேர்வில் முறைகேடுகள் தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. தேர்வை ரத்து செய்வது மட்டுமல்லாமல், முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“தகுதியற்றவர்களை தகுதியானவர்கள் போலவும், தகுதியானவர்களை தகுதியற்றவர்கள் போலவும் காட்டும் நிலை இருக்கக்கூடாது” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் உண்மையான ஆக்கப்பூர்வமான மாற்றமாக இருக்க வேண்டும். அது மக்களுக்கு ஏமாற்றமாக மாறிவிடக்கூடாது. “ஆட்சி காட்சியாக இல்லாமல், ஆட்சியாக நடக்க வேண்டும்” என்றார்.
ஊழல் குறைவது வரவேற்கத்தக்கது என்றாலும், ஊழல் என்பது லஞ்சம் பெறுவது மட்டுமல்ல; தவறான நடவடிக்கைகளும் ஊழலாகவே கருதப்பட வேண்டும். தேர்தல் முறையிலும் மாற்றம் தேவைப்படுகிறது என்றும் கி.வீரமணி கூறினார்.
சட்டப்பேரவை செயல்பாடுகள் குறித்து,
சட்டப்பேரவை என்பது மக்களின் பிரச்சினைகள் மற்றும் ஆக்கப்பூர்வமான கருத்துகளை விவாதித்து சட்டங்களை இயற்றும் இடமாக இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் குறை கூறுவதோ, தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுவதோ ஏற்றுக்கொள்ள முடியாது.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது “ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக இருப்போம்” என்று கூறியிருந்த நிலையில், ஆட்சியும் “ஆக்கப்பூர்வமான ஆட்சியை வழங்குவோம்” என்று கூறியுள்ளது. இருதரப்பினரும் தங்களது வாக்குறுதிகளை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.
சட்டப்பேரவை நடவடிக்கைகள் தற்போது நேரடியாக ஒளிபரப்பப்படுவதால், அவையில் பேசப்பட்ட கருத்துகளை பின்னர் அவைக்குறிப்பிலிருந்து நீக்கினாலும், அது ஏற்கனவே சமூக வலைதளங்களில் பரவி விடுகிறது. எனவே ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களும், மக்களின் நல்வாழ்வுக்கான விவாதங்களும் நடைபெற வேண்டும். பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் ஆகியவற்றை பயன்படுத்தும்போது கண்ணியம் காக்கப்பட வேண்டும்.
தனிப்பட்ட தாக்குதல்கள், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுகள் யார் செய்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என கி.வீரமணி தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN