டாஸ்மாக் முறைகேடு வழக்கு - முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்
சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.) கடந்த 2021 முதல் 2025 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானங்கள் கொள்முதல், பார்களுக்கு உரிமம் வழங்குதல், டெண்டர் ஒதுக்கீடு, போக்குவரத்து மற்றும் ஊழியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில்
டாஸ்மாக் முறைகேடு வழக்கு - முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்


சென்னை, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

கடந்த 2021 முதல் 2025 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானங்கள் கொள்முதல், பார்களுக்கு உரிமம் வழங்குதல், டெண்டர் ஒதுக்கீடு, போக்குவரத்து மற்றும் ஊழியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் பார் உரிமங்களை ஒதுக்கியதில் முறைகேடு செய்து, அரசு கருவூலத்திற்கு சுமார் ₹32.81 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் செல்வாக்கு, டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் தனியார் மதுபான உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து திட்டமிட்டு சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியுடன் தொடர்புடைய 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 11 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b