தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் அமெரிக்க பயணத்திற்கு தடை ஏன்? -மத்திய அரசு விளக்கம்
புதுடெல்லி , 22 ஆகஸ்ட் (ஹி.ச.) தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மேற்கொள்ள இருந்த அமெரிக்க பயணத்திற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் அரசியல் அனுமதி வழங்க மறுத்துள்ளது. இதற்கான காரணம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரண
A


புதுடெல்லி , 22 ஆகஸ்ட் (ஹி.ச.)

தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மேற்கொள்ள இருந்த அமெரிக்க பயணத்திற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் அரசியல் அனுமதி வழங்க மறுத்துள்ளது.

இதற்கான காரணம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம் அளித்துள்ளார்.

முதலமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அவர்களின் பயண நிகழ்ச்சி நிரலை மத்திய வெளியுறவு அமைச்சகம் ஆய்வு செய்வது வழக்கம்.

சம்பந்தப்பட்ட பதவிக்கும், பயணத்தின் நோக்கத்துக்கும் ஏற்ற வகையில் நிகழ்ச்சிகள் மற்றும் சந்திப்புகள் இருக்க வேண்டும்.

அந்த வகையில், ரேவந்த் ரெட்டி மேற்கொள்ள இருந்த அமெரிக்க பயணத்தின் நிகழ்ச்சி நிரல், முதலமைச்சர் பதவிக்கும், பயணத்தின் நோக்கத்துக்கும் ஏற்றதாக இல்லை என்று மத்திய அரசு கருதியதாக ரண்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

இதன் காரணமாகவே அந்த பயணத்திற்கு அரசியல் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அதேநேரத்தில், ரேவந்த் ரெட்டியின் இங்கிலாந்து பயணத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரேவந்த் ரெட்டி தற்போது லண்டனில் உள்ளார். லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா சென்று, அங்கிருந்து ஆகஸ்டு 30-ந் தேதி ஐதராபாத் திரும்ப அவர் திட்டமிட்டிருந்தார்.

அமெரிக்காவில் ‘தெலுங்கானா ரைசிங்’ பிரதிநிதிகள் குழுவினருடன் இணைந்து முதலீட்டாளர்களை சந்தித்து, தெலுங்கானாவுக்கு முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பான நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க இருந்ததாக தெலுங்கானா முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்தது.

ஆனால், அமெரிக்க பயணத்திற்கு மத்திய அரசின் அரசியல் அனுமதி கிடைக்காததால் அந்த பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து ரேவந்த் ரெட்டி திட்டமிட்டதைவிட முன்னதாகவே ஐதராபாத் திரும்ப உள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA