Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
தெலுங்கானாவில் மாணவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படும் சம்பவங்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மவுனம் காப்பதாக பி.ஆர்.எஸ். செயல் தலைவர் கே.டி.ஆர். மற்றும் டி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் கவிதா குற்றம் சாட்டியுள்ளனர்.
டெல்லியில் மாணவர்களின் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தும் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் தெலுங்கானாவில் மாணவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படும் சம்பவங்கள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காதது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் கே.டி.ஆர். வெளியிட்ட பதிவில்,
ஒரு இடத்தில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினால் ராகுல் காந்தி கேள்வி எழுப்புகிறார். போராட்டமும் நடத்துகிறார்.
ஆனால் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் தெலுங்கானாவில் மாணவர்களை போலீசார் இழுத்துச் சென்று, கழுத்தைப் பிடித்து துன்புறுத்தினாலும் அவர் கண்டுகொள்வதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டெல்லியில் போராட்டம் நடத்தியதைப் போல, தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி வீட்டின் முன்பும் ராகுல் காந்தி போராட்டம் நடத்துவாரா? அல்லது தெலுங்கானா மாணவர்கள் உங்களுக்கு ஒரு பொருட்டே இல்லையா?” என்றும் கே.டி.ஆர். கேள்வி எழுப்பியுள்ளார்.
கவிதா கண்டனம்
இதேபோல், எம்.எல்.சி. கவிதாவும் ராகுல் காந்தியின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மகபூபாபாத் பகுதியில் கடந்த 19-ந் தேதி பாலிடெக்னிக் மாணவர் ஒருவரின் கழுத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் பிடித்ததாக கூறப்படும் வீடியோவை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து கவிதா வெளியிட்டுள்ள
அறிக்கையில்,
டெல்லி சம்பவம் தொடர்பாக ஆவேசம் தெரிவித்து, எப்.ஐ.ஆர். பதிவு செய்யக் கோரி சென்ற ராகுல் காந்தி, தெலுங்கானாவில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ஏன் மவுனம் காக்கிறார்? இங்குள்ள மாணவர்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகின்றனர்.
டெல்லிக்கு உங்கள் ஆவேசம், தெலுங்கானாவுக்கு உங்கள் மவுனம். மாணவர்கள் உங்களிடம் இருந்து இதைவிட சிறந்த அணுகுமுறையை எதிர்பார்க்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மீதான போலீசாரின் நடவடிக்கைகள் தொடர்பாக ராகுல் காந்தி உடனடியாக தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று கே.டி.ஆர். மற்றும் கவிதா வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA