Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே மூல வைகை ஆற்றங்கரையில் குவியல் குவியலாக மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது தொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
வருசநாடு அருகே உள்ள மூல வைகை ஆற்றங்கரை பகுதியில் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் சுற்றித்திரியும் வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடும்பாறை வட்டார மருத்துவ அலுவலர் ஜக்கப்பன் தலைமையிலான சுகாதாரத்துறை குழுவினர், மூல வைகை ஆற்றங்கரை பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது ஆற்றங்கரையில் கொட்டப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகளை அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர், வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அங்கு கொட்டப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றும் பணியிலும் சுகாதாரத்துறை குழுவினர் ஈடுபட்டனர்.
பயன்படுத்தப்பட்ட ஊசிகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் ஆற்றங்கரையில் கொட்டப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கழிவுகளை அகற்றியுள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ