Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாட்டின் மிக முக்கியமான தேர்வுகளில் ஒன்றான யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு 2026 இன்று இரண்டாவது நாளாக நாடு முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது.
தலைநகர் டெல்லியில் இன்று காலை முதலே தேர்வர்கள் தங்களது தேர்வு மையங்களுக்கு வருகை தந்தனர். இந்த தேர்வு தினமும் இரண்டு அமர்வுகளாக நடத்தப்படுகிறது. காலை அமர்வு 9 மணி முதல் 12 மணி வரையிலும், பிற்பகல் அமர்வு 2.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் நடைபெறும்.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் இரண்டாம் நாள் தேர்வுக்காக மிகத் தீவிரமான சோதனை நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. தேர்வு மையங்களுக்குள் நுழைவதற்கு முன்பாக தேர்வர்களின் அனுமதி அட்டை மற்றும் அடையாள ஆவணங்கள் கடுமையாக சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு மையங்களுக்கு வெளியே தேர்வர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிக அளவில் கூடியிருந்ததால், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதேபோல், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பவானி நிகேதன் கல்லூரி தேர்வு மையத்திலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வு அமைதியாகவும், ஒழுங்காகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக நிர்வாக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் நேரடியாக களத்தில் இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். தேர்வர்கள் காலை 8 மணி முதலே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் சிவில் பதவிகளுக்காக நடத்தப்படும் இந்த முதன்மை தேர்வு மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. இதன்படி ஆகஸ்ட் 21, 22, 23, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b