அன்பில் மாரியம்மன் கோயில் மண்டபம் குறித்து பரவும் தகவல் தவறு - அறநிலையத்துறை விளக்கம்
சென்னை, 23 ஆகஸ்ட் (ஹி.ச) அம்மை வார்த்தவர்களுக்காக மருத்துவமனைகளில் தடுப்பூசி வழங்குவதற்கு பதிலாக, அவர்களை தங்க வைப்பதற்காக மண்டபம் அமைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது என இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ள
Nn


சென்னை, 23 ஆகஸ்ட் (ஹி.ச)

அம்மை வார்த்தவர்களுக்காக மருத்துவமனைகளில் தடுப்பூசி வழங்குவதற்கு பதிலாக, அவர்களை தங்க வைப்பதற்காக மண்டபம் அமைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது என இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.

சமூக வலைதளங்களில், அம்மை தடுப்பூசியை குழந்தைகளுக்கு மருத்துவமனைகளில் வழங்க வழி செய்யாமல், அவர்களுக்காக மண்டபம் அமைக்கப்படுகிறது என்ற தகவல் பரவி வருகிறது. இதனால் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், இந்த தகவலில் உண்மை இல்லை என்றும், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அன்பில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில், அம்மை வார்த்து குணமானவர்கள் தங்களது பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் கோயிலில் தங்கி வழிபடுவதற்காக மண்டபம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்ததாகவும், அந்தக் கோரிக்கையை ஏற்றே இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

எனவே, மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு அம்மை தடுப்பூசி வழங்குவது தொடர்பான நடவடிக்கைக்கும், கோயிலில் பக்தர்கள் தங்கி வழிபடுவதற்காக மண்டபம் அமைப்பதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் இதுபோன்ற தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்றும், தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ