ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பதவியில் வனப்பணி அதிகாரிகள் - தமிழக அரசு முடிவை கைவிட வேண்டும் அன்புமணி வலியுறுத்தல்
தமிழ்நாடு, 23 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாட்டில் தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்களாக இந்திய வனப்பணி அலுவலர்களை நியமித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலிய
அன்புமணி


தமிழ்நாடு, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்களாக இந்திய வனப்பணி அலுவலர்களை நியமித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கிராமப்புற மக்களுக்கு நேரடியாக சேவை வழங்க வேண்டிய ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பதவிகளில், அந்தத் துறையுடன் நேரடித் தொடர்பில்லாத வனப்பணி அலுவலர்களை நியமிப்பது ஊரக வளர்ச்சிப் பணிகளை பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.

சாலைகள், பாலங்கள், வீட்டு வசதி, குடிநீர், கழிப்பிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் 100 நாள் வேலைத் திட்டம், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 150 நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயல்படுத்தி வருகிறது. இத்துறையின் மாவட்ட அளவிலான முக்கிய அதிகாரிகளாக திட்ட இயக்குனர்கள் செயல்படுகின்றனர்.

ஊரக வளர்ச்சித் துறையில் நீண்ட காலம் பணியாற்றி உதவி இயக்குனர், துணை இயக்குனர், இணை இயக்குனர் உள்ளிட்ட பதவிகளுக்கு உயர்வு பெறும் அதிகாரிகளுக்கு திட்ட இயக்குனர் பதவி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால், கிராமப்புற மக்களின் தேவைகள் மற்றும் ஊரக வளர்ச்சித் திட்டங்களைப் பற்றிய அனுபவம் கொண்ட அதிகாரிகள் சிறப்பாக பணியாற்ற முடியும் என அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வனப்பணி அதிகாரிகளை திட்ட இயக்குனர்களாக நியமிப்பதால், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்றும், அதிகாரிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு குறைந்து துறையின் செயல்பாடுகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, ஊரக மக்களின் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, இந்திய வனப்பணி அதிகாரிகளை திட்ட இயக்குனர்களாக நியமிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.

அதற்கு பதிலாக, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி திட்ட இயக்குனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P