அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை சரிவு - ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகன் ரெட்டி குற்ற சாட்டு
அமராவதி , 23 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆந்திரபிரதேசத்தில் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 5½ லட்சத்துக்கும் மேல் குறைந்துள்ளதாக முன்னாள் முதல்-அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்ச
A


அமராவதி , 23 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆந்திரபிரதேசத்தில் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 5½ லட்சத்துக்கும் மேல் குறைந்துள்ளதாக முன்னாள் முதல்-அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் ,மத்திய கல்வி அமைச்சகத்தின் UDISE+ புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தனியார் பள்ளிகளில் இருந்து 1 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக கூறி வருகிறது.

இது உண்மையாக இருந்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டும்.

ஆனால், UDISE+ புள்ளிவிவரங்களின்படி, 2023–24 கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 40 லட்சத்து 50 ஆயிரத்து 116 மாணவர்கள் இருந்தனர்.

2025–26 கல்வியாண்டில் இந்த எண்ணிக்கை 34 லட்சத்து 93 ஆயிரத்து 450 ஆக குறைந்துள்ளது. அதன்படி 5 லட்சத்து 56 ஆயிரத்து 666 மாணவர்கள் குறைந்துள்ளனர்.

அதே காலகட்டத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 45 லட்சத்து 53 ஆயிரத்து 380-ல் இருந்து 48 லட்சத்து 40 ஆயிரத்து 296 ஆக அதிகரித்துள்ளது.

அரசு பள்ளிகளின் எண்ணிக்கையும் சுமார் 45 ஆயிரத்தில் இருந்து 44 ஆயிரத்து 222 ஆக குறைந்துள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு பள்ளி கல்வி அமைப்பை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை கூட்டணி அரசு மேற்கொண்டு வருவதாக ஜெகன் குற்றம்சாட்டினார்.

நாராயணா, ஸ்ரீ சைதன்யா போன்ற கார்ப்பரேட் கல்வி நிறுவனங்களுடன் தெலுங்கு தேசம் கட்சிக்கு உள்ள தொடர்புகளே இதற்கு காரணம் என்றும் அவர் விமர்சித்தார்.

நாடு–நேடு திட்டம்தங்கள் ஆட்சிக்காலத்தில் அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஜெகன் தெரிவித்தார்.

‘மனபடி–நாடு–நேடு’ திட்டத்தின் கீழ் ரூ.8,524 கோடி செலவில் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதாகவும், மாணவர்களுக்கு டேப்லெட்டுகள் மற்றும் டிஜிட்டல் கல்வி உள்ளடக்கம் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், இன்டராக்டிவ் பிளாட் பேனல்கள், ஸ்மார்ட் டி.வி.கள் உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டதுடன், ஆங்கில வழிக் கல்வி மற்றும் டோஃபல் போன்ற சர்வதேச அளவிலான பயிற்சிகளுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கூட்டணி அரசு வெளியிடும் தகவல்களுக்கும் UDISE+ புள்ளிவிவரங்களுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாகவும், இதன் மூலம் அரசின் பிரசாரத்தின் உண்மை நிலை வெளிப்படுவதாகவும் ஜெகன் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA