Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பிரசித்தி பெற்ற மேகமலை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல விதிக்கப்பட்ட தடை 38-வது நாளாக இன்றும் தொடர்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவி, தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.
கடமலைக்குண்டு வனப்பகுதிக்கு உட்பட்ட இந்த அருவிக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக மேகமலை வனப்பகுதியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிக்கு செல்லும் நடைபாதை மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் தூண்கள் கடுமையாக சேதமடைந்தன.
சேதமடைந்த தடுப்புகளை சீரமைக்கும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாலும், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் மேகமலை வனத்துறை சார்பில் தற்காலிக தடை விதிக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி முதல் விதிக்கப்பட்ட இந்த தடை தற்போது 38-வது நாளாக இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, பாதுகாப்பு தடுப்புகள் சரி செய்யப்பட்ட பின்னரே மீண்டும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் அருவி பகுதிக்கு முன்பாக சோதனைச் சாவடி அமைத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வார இறுதி நாட்களைக் கழிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் மேகமலை அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b