Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
புதுச்சேரியில் நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதித்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் என். ரங்கசாமி நாளை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
முன்னதாக தேர்தல் மற்றும் நிர்வாக காரணங்களால் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களுக்கு ரூ. 5,396 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன் காலம் முடிவடைவதால் தற்போது இந்த முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது
சுமார் ரூ.14,300 கோடி மதிப்பிலான இந்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள், புதிய திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
நாளை காலை சட்டப்பேரவை கூடும் நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி தனது நிதிநிலை உரையை வாசித்து பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
வழக்கம்போல இந்த முறையும் மக்கள் மீது புதிய வரிகள் ஏதுமின்றி வரியில்லா பட்ஜெட்டாக பட்ஜெட் தாக்கல் அமையுமா என புதுச்சேரி அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதியோர் உதவித்தொகை உயர்வு, மகளிருக்கான பிரத்யேக நலத்திட்டங்கள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் மாநில உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த அறிவிப்புகள் இதில் இடம்பெற வாய்ப்புள்ளது.
Hindusthan Samachar / vidya.b