புதிதாக திறக்கப்பட்ட அரசு டாஸ்மாக் கடையை நிரந்தமாக மூட வேண்டும் - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்
விழுப்புரம், 23 ஆகஸ்ட் (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஜம்போதி ஊராட்சியில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை மூடிவிட்டு, அந்த மதுபானக் கடையை சுமார் 25 கிமீ தூரம் தள்ளி இருக்கும் மயிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ந
CV Shanmugam


விழுப்புரம், 23 ஆகஸ்ட் (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஜம்போதி ஊராட்சியில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை மூடிவிட்டு, அந்த மதுபானக் கடையை சுமார் 25 கிமீ தூரம் தள்ளி இருக்கும் மயிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நடுவனந்தல் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

நடுவனந்தல் கிராமத்தில் புதியதாக அரசு டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் செஞ்சி தொகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை 25 கிமீ தூரம் தள்ளி இருக்க கூடிய மயிலம் தொகுதியில் உள்ள நடுவனந்தல் கிராமத்தில் திறக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த டாஸ்மாக் மதுபானக் கடையை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் வலியுறுத்தினார்.

இந்நிலையில் மயிலம் தொகுதி நடுவனந்தல் கிராமத்தில் புதியதாக திறக்கப்பட்டுள்ள பிரச்சனைக்குரிய அரசு டாஸ்மாக் மதுபானக் கடை அமைந்துள்ள பகுதிக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

அப்போது டாஸ்மாக் கடையில் மதுபான பாட்டில்களை வாங்குவதற்காக காத்திருந்த குடிமகன்கள், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டதும்

”வேண்டும், வேண்டும் டாஸ்மாக் கடை வேண்டும், சாகும் வரை குடிப்போம், கடன் வாங்கி குடிப்போம் என முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டதால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முழக்கமிட்ட குடிமகன்களை விரட்டியடித்தனர்.

இதனைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறுகையில்,

விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஜம்போதி கிராமத்தில் மூடப்பட்ட அரசு மதுபான கடையை, 25 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் இந்த நடுவனந்தல், கிராண்டிபுரம் கிராமத்திற்கு நடுவே, விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் அதிகம் நிறைந்திருக்கும் இந்த பகுதியில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சட்டமன்றத்தில் பேசி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரிலேயே அரசு மதுபான கடை அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த பகுதியில் அரசு மதுபான கடை இருப்பது பொது மக்களுக்கு நல்லதல்ல. நகரத்திலேயே மதுபான கடை திறக்கக்கூடாது என்ற போது, கிராமப் பகுதியில் அமைப்பது எப்படி நியாயம்.

இரண்டு கிராம மக்களும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என தீர்மானம் போட்டுள்ளனர்.

மதுபான கடையை நிரந்தரமாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Hindusthan Samachar / ANANDHAN