Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசியதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நாளை முக்கிய விசாரணை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசை வீழ்த்தும் நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் (குறிப்பாக ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. இளையராஜாவிடம்) தலா ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இப்புகாரின் அடிப்படையில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, இதே சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கை திருவல்லிக்கேணி காவல்துறையினர் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்த விசாரணையின் போது திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடருமா அல்லது நீக்கப்படுமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நாளைய விசாரணை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தரப்பினருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டதால், அமலாக்கத்துறையும் இதில் விசாரணையைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b