Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் மலையாளத் தெருவை சேர்ந்தவர் ரேகா (45). இவர் தனது பேத்தியின் காதுகுத்து விழாவிற்கு துணி எடுப்பதற்காக தனது குடும்பத்துடன் செங்கல்பட்டு வந்துள்ளார்.
ரேகா அவரது மகன், மகள், மருமகள் என நான்கு பேரும் ஒன்றாக காரில் வந்துள்ளனர். அப்போது செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜூஸ் கடையில் ஜூஸ் குடிப்பதற்காக காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளனர்.
அப்போது ஜூஸ் கடையின் அருகே இருந்த ஹோட்டல் ஊழியர் ஹோட்டல் முன்பு வாகனத்தை நிறுத்த வேண்டாம் எனவும், காரை இங்கிருந்து எடுக்குமாறு கூறியுள்ளார்.
இதில் ஹோட்டல் ஊழியருக்கும், ரேகா குடும்பத்தினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.
அப்போது ஓட்டல் உரிமையாளரான செங்கல்பட்டு திமுக நகர செயலாளரும், செங்கல்பட்டு நகர மன்ற தலைவரின் கணவருமான நரேந்திரன் மற்றும் 30-வது வார்டு திமுக கவுன்சிலர் சந்தோஷ் மற்றும் கடையில் வேலை பார்த்து வந்த நபர்கள் சேர்ந்து தாக்கி உள்ளனர்.
இதில் ரேகா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பலத்த காயம் ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் செங்கல்பட்டு திமுக நகர செயலாளர் நரேந்திரன் (59), செங்கல்பட்டு 30-வது வார்டு கவுன்சிலர் சந்தோஷ் (45), ராமப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன் (40), மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த சூரியா (32) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
மேலும் இவர்கள் மீது பெண்கள் துன்புறுத்தல் தடைச்சட்டம், கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட பின் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
விசாரணை நடத்திய நீதிபதி திமுக நகர செயலாளர் நரேந்திரன் உட்பட நான்கு பேரை செப்டம்பர் 4ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து நான்கு பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN