மேகமலை புலிகள் காப்பக ஆக்கிரமிப்பு - 118 அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு
தேனி, 23 ஆகஸ்ட் (ஹி.ச) தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ள அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கிய பகுதியாகவும், புலிகள் உள்ளிட்ட
Encroachment in Meghamalai Tiger Reserve


தேனி, 23 ஆகஸ்ட் (ஹி.ச)

தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ள அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கிய பகுதியாகவும், புலிகள் உள்ளிட்ட அரிய வன உயிரினங்களின் புகலிடமாகவும் விளங்கும் மேகமலை புலிகள் காப்பகத்தில், சுமார் 4,600 குடும்பங்கள் சட்டவிரோதமாக குடியேறி வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்தது.

இந்த ஆக்கிரமிப்புகள் வனத்தின் சூழலியல் சமநிலைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக வன ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வசித்து வரும் அனைத்து குடும்பங்களையும் உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வனப் பாதுகாப்புச் சட்டத்தை மீறி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றி, வனப்பகுதியை மீட்டெடுக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் தீவிர விசாரணையில் இறங்கியது. அப்போது, வனப்பகுதியை ஆக்கிரமித்தவர்களில் அரசு அதிகாரிகள் பலரும் இருப்பது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களின் முழு விவரங்கள் அடங்கிய பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியலின்படி, காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளைச் சேர்ந்த 118 அதிகாரிகள் வன நிலத்தை ஆக்கிரமித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மீது உரிய விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நடவடிக்கை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b