Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, ஒரு பகுதி பிரியாணி அண்டாவில் சமைக்கப்பட்டதாக வெளிச்சத்துக்கு வந்த சம்பவத்தில், தலைமறைவாக உள்ள கொலையாளிகளை பிடிக்க போலீசார் பல்வேறு மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆக்ரா ரயில் நிலையத்தில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்ணின் உடல் பாகங்கள் அடங்கிய சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அதன் பின்னணி கூடுவாஞ்சேரியில் இருப்பது தெரியவந்தது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சூட்கேஸை ரயிலில் வைத்துச் சென்ற ஆண் மற்றும் பெண்ணின் நடமாட்டத்தை கண்காணித்தனர். அவர்கள் கூடுவாஞ்சேரிக்கு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது, அங்கு பெரிய பிரியாணி பாத்திரத்தில் மனித உடல் பாகங்கள் சமைக்கப்பட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது. உடல் பாகங்கள் வெட்டப்பட்டு, அரிசி மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து சமைக்கப்பட்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தப் பாத்திரம் உள்ளிட்ட தடயங்கள் கைப்பற்றப்பட்டு தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் கொல்லப்பட்டவர் ஹயத்தூன் நிஷா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பகபதி மாஜி ஆகியோருக்கும் முன்பே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மாணிக் லஸ்கர் மற்றும் பகபதி மாஜி இடையேயான உறவுக்கு ஹயத்தூன் நிஷா இடையூறாக இருந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, கொலைக்குப் பிறகு மாணிக் லஸ்கரும் பகபதி மாஜியும் ரயில் மூலம் அசாம் நோக்கி தப்பிச் சென்றிருக்கலாம் என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் அசாம் விரைந்துள்ளனர். 4 ஆண் காவலர்கள் மற்றும் ஒரு பெண் காவலர் என 5 பேர் கொண்ட தனிப்படை அசாமில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொலையாளிகளின் செல்போன் சிக்னல்களை தொடர்ந்து கண்காணித்து வரும் போலீசார், அவர்களின் இருப்பிடத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் மற்றொரு தனிப்படை ஒடிசா மாநிலத்திற்கும் விரைந்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P