ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 13 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
தர்மபுரி, 23 ஆகஸ்ட் (ஹி.ச.) தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. நேற்று காலை 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் படிப்படியாக அதிகரித்து 12 ஆயிரம்
ஒகேனக்கல்


தர்மபுரி, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

நேற்று காலை 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் படிப்படியாக அதிகரித்து 12 ஆயிரம் கன அடியாக பதிவானது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை 7 மணி நிலவரப்படி நீர்வரத்து மேலும் அதிகரித்து 13 ஆயிரம் கன அடியாக பதிவாகியுள்ளது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், ஒகேனக்கல் அருவி மற்றும் ஆற்றுப் பகுதிகளில் நீரின் வேகம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்கி குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள தடை தொடர்ந்து 8-வது நாளாக நீடித்து வருகிறது.

நீர்வரத்து குறைந்து, ஆற்றின் நிலைமை பாதுகாப்பானதாக மாறிய பின்னரே பரிசல் இயக்குவதற்கான அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்தின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam