Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாகப்பட்டினம் மாவட்டம் ஆலத்தூரைச் சேர்ந்தவர்கள் சிவகாசியில் நடைபெறவுள்ள திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சுற்றுலா வேனில் சென்று கொண்டிருந்தனர்.
வேன் இன்று அதிகாலை மதுரை கப்பலூர் சுற்றுச்சாலை பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் வேனில் பயணித்த ஆலத்தூரைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வேனில் இருந்த 14 பேர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் பலத்த காயமடைந்த மூன்று பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தின் காரணமாக கப்பலூர் மேம்பாலத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனிடையே விபத்து நடந்த இடத்தில் கூட்டம் கூடியிருந்தபோது, அவ்வழியாக வந்த மினி பேருந்து ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. விபத்து குறித்து கப்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b