நீலகிரியில் ஆட்கொல்லி புலி வேட்டை தீவிரம் - 2 வது நாளாக 80 பேர் கொண்ட வனத்துறை குழு தேடுதல்
நீலகிரி, 23 ஆகஸ்ட் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம் ஓவேலி வனச்சரகத்திற்கு உட்பட்ட லாரெஸ்டன் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி தனது விவசாய நிலத்திற்கு நீர் எடுக்கச் சென்ற எம். பாலகிருஷ்ணன் (58) என்பவரை அந்த புலி தாக்கிக் கொன்றது. இத
Intense hunt for man-eating tiger in the Nilgiris


நீலகிரி, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம் ஓவேலி வனச்சரகத்திற்கு உட்பட்ட லாரெஸ்டன் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி தனது விவசாய நிலத்திற்கு நீர் எடுக்கச் சென்ற எம். பாலகிருஷ்ணன் (58) என்பவரை அந்த புலி தாக்கிக் கொன்றது.

இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) லாரெஸ்டன் பகுதியில் மீண்டும் ஒருவரை தாக்கிக் கொன்றது. தொடர் மனித உயிரிழப்புகளை அடுத்து, தமிழக தலைமை வன உயிரின காப்பாளர் அந்த புலியை பிடிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து கூடலூர் வனத்துறையினர் புலியை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இன்று இரண்டாவது நாளாக நடைபெறும் இந்த தேடுதல் வேட்டையில் 80 பேர் கொண்ட சிறப்பு வனக்குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் ட்ரோன்கள் உதவியுடன் வனப்பகுதி முழுவதும் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

ஆட்கொல்லி புலியை உயிருடன் பிடிக்க வனத்துறையினர் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

புலியின் நடமாட்டம் உள்ளதாக கருதப்படும் ஏழு இடங்களில் பிரத்யேக இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் புலியின் நகர்வை துல்லியமாக கண்காணிக்க 50 இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கூண்டில் சிக்காவிட்டால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் தயார் நிலையில் மருத்துவக் குழுவினர் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் தனியாக வனப்பகுதிக்குள் செல்லவோ, வெளியே நடமாடவோ வேண்டாம் எனவும், வயல்வெளிகளுக்கு குழுவாக மட்டுமே செல்ல வேண்டும் எனவும் வனத்துறையினர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புலி பிடிபடும் வரை இரவு நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b