Enter your Email Address to subscribe to our newsletters

ஜம்மு , 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் 22-ந்தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ பொறுப்பேற்றதாக கூறப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் மீது தேசிய புலனாய்வு முகமை (NIA) குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பான வழக்கில் NIA சார்பில் கடந்த டிசம்பர்
15-ந் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 7 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹபீஸ் சயீத்துக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, பஹல்காம் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ள ஹபீஸ் சயீத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்முவில் உள்ள சிறப்பு NIA நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும் என சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை மேற்கொண்டது.
இதன் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA