சிவகங்கையில் சட்டவிரோத மின்வேலியில் சிக்கி கபடி வீரர் உயிரிழப்பு - தோப்பு உரிமையாளர் கைது
சிவகங்கை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் காட்டுப் பன்றிகள் மற்றும் விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக உயர் மின் அழுத்த மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது
Kabaddi player dies after getting caught in an illegal electric fence


சிவகங்கை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் காட்டுப் பன்றிகள் மற்றும் விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக உயர் மின் அழுத்த மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த வழியாக சென்ற கபடி வீரர் எதிர்பாராத விதமாக மின்வேலியில் சிக்கியுள்ளார். மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த வீரரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தென்னந்தோப்பின் உரிமையாளரான தினகரன் என்பவர் அனுமதியின்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

விவசாய நிலங்களில் காட்டு விலங்குகளைக் கட்டுப்படுத்த மின்வாரியத்தின் அனுமதியின்றி, வீடுகளில் இருந்து மின்சாரத்தை எடுத்து வேலி அமைப்பது சட்டப்படி கடுமையான குற்றமாகும். இத்தகைய செயல்களால் மனித உயிரிழப்புகள் ஏற்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் எச்சரித்துள்ளது.

இளம் கபடி வீரரின் இந்தத் திடீர் மறைவு அவரது கிராம மக்களிடையேயும், விளையாட்டு வட்டாரத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b