Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு , 23 ஆகஸ்ட் (ஹி.ச.)
பெங்களூரு ஜே.சி.நகர் பகுதியில் 64 வயது ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வசித்து வருகிறார்.
இவர் தனது முகநூல் கணக்கை பயன்படுத்தியபோது, ‘கேரளா மெகா லாட்டரி’ என்ற பெயரில் வந்த விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் கொடுக்கப்பட்டிருந்த லிங்கை திறந்து பார்த்தபோது, ஒரு லாட்டரி டிக்கெட்டின் விலை ரூ.200 என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை நம்பிய முதியவர் ரூ.1,000 செலுத்தி 5 லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மர்மநபர்கள் சிலர் முதியவரை செல்போனில் தொடர்புகொண்டு, அவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுகளில் ஒன்றுக்கு ரூ.12 லட்சம் பரிசு விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், பரிசுத்தொகையை பெறுவதற்கு முதலில் ஜி.எஸ்.டி. கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், வங்கி தடையில்லா சான்றிதழ் மற்றும் காசோலை தடையில்லா கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் பல்வேறு காரணங்களை கூறியுள்ளனர்.
இதனை நம்பிய முதியவர், மர்மநபர்கள் தெரிவித்தபடி பல்வேறு தவணைகளில் பணத்தை செலுத்தியுள்ளார். இவ்வாறு அவரிடம் இருந்து மொத்தம் ரூ.22 லட்சம் வரை பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தை முழுமையாக செலுத்திய பின்னரும் ரூ.12 லட்சம் பரிசுத்தொகை முதியவருக்கு கிடைக்கவில்லை. தான் செலுத்திய ரூ.22 லட்சமும் திரும்ப கிடைக்காததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து மர்மநபர்களை செல்போனில் தொடர்புகொள்ள முதியவர் முயன்றுள்ளார். ஆனால் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் தான் லாட்டரி பரிசு என்ற பெயரில் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த முதியவர், பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவரிடம் இருந்து ரூ.22 லட்சத்தை மோசடி செய்த மர்மநபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA