மானாமதுரை அருகே காதல் விவகாரத்தில் சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை
சிவகங்கை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காதல் விவகாரத்தில் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச்
கொலை


சிவகங்கை, 23 ஆகஸ்ட் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காதல் விவகாரத்தில் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவபாலன் (30), சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இவர் தனது உறவினர் பெண்ணை காதலித்து வந்ததாகவும், இவர்களின் காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று சின்ன புதுக்கோட்டை கிராமத்தில் இருந்த சிவபாலனிடம் பெண்ணின் உறவினர்கள் தகராறில் ஈடுபட்டதாகவும், பின்னர் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சிவபாலன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மானாமதுரை போலீசார், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ளவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே, சம்பவம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களிடம் மானாமதுரை காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் வீடியோ பதிவு செய்யக் கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் செய்தியாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

மானாமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், குற்றங்களைத் தடுக்க போலீசார் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam